தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த மன்னார் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை(17) மதியம் அனுமதி வழங்கியுள்ளது.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்றைய தினம் (16) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் இன்றைய தினம் (17) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் .
இதன் போது விசாரணைகளை மேற்கொள்ள மன்னார் மாவட்ட பதில் நீதவான் எஸ்.ஜெபநேசன் லோகு பொலிஸாரின் விண்ணப்பத்திற்கு அமைய குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 48 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் காவலில் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதேவேளை இன்றைய தினம் (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட சிறுமியின் சடலம் இன்று சனிக்கிழமை (17) காலை 10.30 மணியளவில் பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டது.
பிரேத பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி செல்லத்துரை பிரணவன் குறித்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.