மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள்!

மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள்! நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளீர்களா வாங்க தெரிஞ்சுக்கலாம்

உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடலில் தென்படும் அறிகுறிகளை அடிப்படையாகக்கொண்டு சிகிச்சை பெற்றுவிடலாம். ஆனால் மன நோய் அப்படிப்பட்டதல்ல. நீண்ட காலம் வெளியே தெரியாது.

தாமதமாக தெரிய வரும்போது முழுமையான சிகிச்சை பெற முடியாது. மனக்கவலைகள் ஏற்பட்டால் அதில் இருந்து விரைவாகவே மீண்டுவந்துவிடவேண்டும். சில அறிகுறிகள் தென்படும்போதே எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

பசியின்மை, தூக்கமின்மை போன்றவை ஏற்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவை மன நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இரண்டு வாரங்களுக்கு மேல் அந்த பிரச்சினைகள் தொடர்ந்தால் நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அது மன அழுத்தத்தை குறைக்க வழி வகை செய்யும்.

மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள்! - Dinamani news - மன அழுத்தத்தை, மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள், மன அழுத்தத்தைக் கையாளும்

ஒருவருடைய நடவடிக்கையில் திடீரென்று மாற்றங்கள் ஏற்படுவது நல்ல மன ஆரோக்கியத்திற்கான வெளிப்பாடு அல்ல. உங்களுக்கு நெருக்கமான ஒருவர் வழக்கத்தை மீறி உணர்ச்சி வசப்பட்டாலோ, மனச்சோர்வு அடைந்தாலோ, திடீர் மாற்றங்களை வெளிப்படுத்தினாலோ அவை மன நோய்க்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக இருக்கலாம்.

விளையாட்டில் தோல்வி, தேர்வில் தோல்வி, வகுப்பில் கவனம் செலுத்தாமல் இருத்தல், பிடித்தமான செயல்களில் கூட ஆர்வம் இல்லாமல் இருத்தல் போன்றவை மன ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களாகும்.

அதில் இருந்து விடுபடாமல் அது சார்ந்த சிந்தனையில் மூழ்கும்போது மன அழுத்தம் தோன்றி அது மன நோயாக மாறக்கூடும். வழக்கமான நடவடிக்கைகளில் அசாதாரண மாற்றங்கள் நிகழ்வதும் மன நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

மன நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் சிந்தித்து வேலை செய்வதும், அதில் கவனம் செலுத்துவதும் கடினம். நினைவுத்திறன், சிந்தனை திறன், பேச்சு போன்றவற்றிலும் சிக்கல் நேரும்.

நெருங்கி பழகுபவர்கள், உங்கள் நலனில் அக்கறை காட்டுபவர்களை விட்டு விலகி இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதும் மன நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் பதற்றத்துடன் காணப்படுவது, பயப்படுவது, மற்றவர்கள் மீது தேவையில்லாமல் சந்தேகம் கொள்வது போன்றவையும் மன நோய்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதன்மீது மிகையாக நம்பிக்கை கொள்வதும், சஞ்சலத்திற்கு ஆளாகுவதும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.

நம்மைச் சுற்றி நிலவும் சுழல்கள் மற்றும் சமூக அமைப்புகளே பொதுவாக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த மன அழுத்தம் என்பது சிறியவர் முதல் பெரியவர் யாரை வேண்டுமானாலும் எந்நேரத்திலும் தாக்கலாம்.

மேலும், மன அழுத்தம் என்பது மனதளவில் மட்டும் அல்லாமல் உடல் அளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே, முடிந்தளவு மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வது நல்லது.

மன அழுத்தம் ஏற்படும் காரணங்கள் என்று பார்த்தால், கவலை, சுற்றுப்புறச் சூழ்நிலை, சப்தம், கூட்டம், குடும்பம் மற்றும் தொழில் நெருக்கடிகள், அதிக வேலைப்பளு, கட்டுப்பாட்டுக்குள் வராத விஷயங்கள் குறித்துக் கவலைப்படுவது. பதட்டமும் அவசரமும் நிறைந்த வாழ்க்கை முறை மேலும் ஒருவர் உடல் அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தருணங்களில் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்.

அதுபோல, பொதுவாக மன அழுத்தத்தைப் பொருத்தவரை ஆண்களைவிட பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம், பெண்கள் குடும்ப பொறுப்புகளை கையாள்வதோடு, வேலைக்கு செல்லவும் நேரிடுவதால், அதிகளவு மன அழுத்தத்தை உணருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள்! - Dinamani news - மன அழுத்தத்தை, மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள், மன அழுத்தத்தைக் கையாளும்

மன அழுத்தத்தின் அறிகுறிகள்

மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்று எடுத்துக் கொண்டால், அது நபருக்கு நபர் வேறுபடும். அந்தவகையில், பதட்டம், எரிச்சல், மனம் ஒருமுகப்படுத்த முடியாதது, அதிகக் களைப்படைவது, தூக்கமின்மை, வாய் உலர்ந்துவிடுவது, மூச்சுவிடுவதில் சிரமம், அஜீரணக் கோளாறு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உள்ளங்கை வேர்ப்பது, இருதயம் வேகமாகத் துடிப்பது, உடல் தசைகள் இறுகுவது போன்றவை மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.

மன அழுத்தத்தின் பாதிப்புகள்

ஒருவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்போது, உடலில் பல்வேறு ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனால், அதிக இதயத்துடிப்பு, அதிக ரத்த அழுத்தம், வயிற்றில் அதிக அமிலம் சுரப்பது, அதிகமாகத் தசைநார்கள் விரைப்படைவது, ரத்தத்தில் சர்க்கரையும் கொழுப்பும் அதிகரிப்பது, ரத்தத்தின் தடிமன் அதிகரிப்பது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது போன்ற பல விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன.

எனவே, ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான மூல காரணத்தை கண்டறிந்து அதற்குத் தீர்வு காண்பதே சரியான தீர்வு தரும்.

மன அழுத்த அளவைக் குறைப்பது கடினமான விஷயம் அல்ல. மன அழுத்தத்தை குறைக்க சின்ன சின்ன வழி முறைகளை கடைபிடித்தாலே, விரைவில் கட்டுப்படுத்திவிடலாம். அவற்றுள், ஆழமான சுவாச பயிற்சிகள், தியானம் மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றால் நாம் எளிமையாக மன அழுத்தத்தை குறைக்க முடியும். அந்த வகையில், மன அழுத்தத்தை கையாளும் வழிகளை பற்றி தெரிந்து கொள்வோம்:

மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழிகள்

வாழ்க்கையில் பிரச்னைகளே வரக் கூடாது என்று எண்ணுவதைவிட பிரச்னைகளை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றித் திட்டமிட வேண்டும். ஒரு பிரச்னை வந்தால், அது உங்களுக்கானது மட்டும் அல்ல. உங்களைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை உணர வேண்டும். அதனால், துயரங்கள் அனைத்தையும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்லது.

வேலைநிமித்தமான அழுத்தம் ஏற்படும்போது, அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது, பிரச்னைகளையும் அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டும். வீட்டுக்கு வந்தும், அலுவலக வேலைகளைத் தொடரக் கூடாது. கூடுமானவரை இதைத் தவிர்க்கவேண்டும். தினசரி எட்டு மணி நேர உறக்கம் என்பதை கட்டாயப்படுத்திக் கொள்வது அவசியம். அப்போதுதான், அடுத்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளவும் வேலைகளில் கவனம் செலுத்தவும் முடியும்.

மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள்! - Dinamani news - மன அழுத்தத்தை, மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள், மன அழுத்தத்தைக் கையாளும்

உணவுப்பழக்கம் முக்கியமான ஒன்று. ஒரேசமயத்தில் வயிறுமுட்ட சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை அறவே தவிர்க்கலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிப்பது மன ஆரோக்கியத்துக்கு அவசியமானது.

நாம் நினைக்கிற மாதிரிதான் எல்லோரும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால், அது சாத்தியமே இல்லை. எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களிடமும் பழகவேண்டிய சூழல் ஏற்படும். அவர்களைப் புரிந்துகொள்ளவும் அதனை ஏற்கவும் பழகவேண்டும்.

ஆக்கபூர்வமான செயல்களுக்கான நேரத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களுக்கு முன்னுரிமை தருவதைத் தவிர்க்கவேண்டும். நேர மேலாண்மையில் கவனம் செலுத்தலாம். வாழ்க்கைக்கு எது அவசியமானது.

உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த இடத்தில் எப்படியான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. நம்முடைய உணர்வுகள் பிறரைக் காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்வது மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

தோல்விகள் என்பது நிரந்தரம் இல்லை. ஆனால், அந்தத் தோல்விகளிலிருந்து, எப்படி வெளியே வர வேண்டும் என்ற பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தற்காலிக மன அழுத்தம் என்பது அதுவாகவே சரியாகிவிடும். ஆனால், சில பிரச்னைகளால் சாப்பிட முடியாமல், தூங்கமுடியாமல் போனாலோ, வேலைகளில் பாதிப்பு ஏற்பட்டாலோ அது தீவிர மன அழுத்தமாக மாறிவடும் இதுமாதிரியான சூழலில் மனநல மருத்துவரைச் சந்தித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதே சரியானது.