மிருசுவில் படுகொலைகளைச் செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கியமையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்ய இலங்கை உச்சநீதிமன்றம் இணங்கியுள்ளது.
அந்த படுகொலைச் சம்பவத்தை செய்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜண்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பதவியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.
இதை எதிர்த்து கொழும்பிலுள்ள மாற்றுக் கொள்ளைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தொடர்ந்த வழக்கை விசாரிக்க இலங்கை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (13) அனுமதியளித்தது.
2000ஆம் ஆண்டு டிசம்பரில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மிருசுவில் கிராமத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 8 தமிழ் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 2015ஆம் ஆண்டு சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க குற்றவாளியாக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் 2019இல் உறுதி செய்தது.
எனினும், கொவிட்-19 பெருந்தொற்றுக்கால நெருக்கடியின் போது அதைச் சமாளிக்க இலங்கை போராடிக் கொண்டிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ச 2020 மார்ச் 26 அன்று, அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இதை எதிர்த்து இப்போது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறுப்பினர்களும் இணைந்துள்ளனர்.
இந்த மனுவை மேலும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், எதிர்மனுதாரர்களுக்கு பதில் அளிக்க கால அவகாசம் அளித்து, வழக்கின் விசாரணையை 2024 மே 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மிருசுவிலைச் சேர்ந்த ஒன்பது அப்பாவி தமிழ் பொதுமக்கள் தங்களின் பூர்வீக வீட்டிற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இரண்டு இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கண்கள் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அதில் ஒரு இளைஞர் தப்பினார் மீதமுள்ளவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு அவர்களின் உடல்கள் அருகிலேயே புதைக்கப்பட்டன.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சுனில் ரத்நாயக்க மீது வழக்கு தொடுக்கப்பட்டு அது 13 ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர் 2015 ஜூலை மாதம் கொழும்பு உயர்நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டார்.
தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் பின்னர் நீதிபதிகள் 9 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என உறுதி செய்தனர். இதையடுத்தே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் சுமார் ஐந்து தசாப்தங்களாக இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த வேளையில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “தாமதங்கள் இருந்தபோதிலும், வழங்கப்பட்டபோது இது ஒரு அரிய நிகழ்வு” எனக் கூறியது.
இலங்கை அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் குற்றவாளி மரண தண்டனை விதிக்கப்பட்டவராக இருக்கும் போது கூடுதல் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
கூடுதலாக, ஜனாதிபதி எந்தவொரு அதிகாரத்தையும் நியாயமாகவும், பொது நலனுக்காகவும் மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்கிறது அரசியல் யாப்பு.
எவ்வாறாயினும், இந்த வழக்கில் ரத்நாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான தீர்மானம் தன்னிச்சையானது, நியாயமற்றது, சட்டத்திற்கு புறம்பானது மற்றும் பொதுநலன் கருதி எடுக்கப்படவில்லை என்பது மனுதாரர்களின் நிலைப்பாடாகும். மேலும் ரத்நாயக்கவுக்கு உரிய சட்டவழிமுறைகள் அளிக்கப்பட்டன எனவும் நீதிபரிபாலனத்தில் பிறழ்வு ஏதுமில்லை எனவும் அந்த நிலையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
”உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் தண்டனையை உறுதிசெய்துள்ள நிலையில், ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் , சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு மன்னிப்பு என்பது மக்களின் இறையாண்மையையும், அரசியலமைப்பின் 12 (1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகும் என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்பு (ICJ) அந்த நேரத்தில் இந்த பொது மன்னிப்பைக் கண்டித்து “இந்த மன்னிப்பு இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் மீது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறியது.
மரண தண்டனை நீக்கப்பட்டதை ICJ வரவேற்றிருந்த போதிலும், இலங்கை அரசாங்கம் தன்னிச்சையான முறையில் அத்தகைய மன்னிப்பை வழங்கியதை கடுமையாக விமர்சித்தது. 2020ஆம் ஆண்டில் மன்னிப்பு வழங்கப்பட்ட நேரத்தில் ICJ இன் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய இயக்குனர் பிரடெரிக் ரவாஸ்கி கூறினார்.
“அத்தகைய மன்னிப்பானது தண்டனையின்மை மற்றும் நீதிக்கான அணுகல் தொடர்பான சர்வதேச நியமங்கள் மற்றும் தரங்களுடன் பொருந்தாது, மேலும் மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு கூட இராணுவத்திற்கு எந்தவொரு பொறுப்புக்கூறலிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது என்று நன்கு நிறுவப்பட்ட பொதுக் கருத்தை வலுப்படுத்துகிறது”.
மேலும், சட்டவிரோதமாக பொதுமக்கள் கொல்லப்படுவது போன்ற கடுமையான குற்றங்களுக்கு, அத்தகைய மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான உரிமைக்கு முரணாக பொது மன்னிப்பு இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை. ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்குச் சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறையே நடந்ததுண்டு.
அது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன்றில்கூட இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தம் சொந்த ஊருக்குச் சென்று திரும்பாதவர்களும் உண்டு. கடலும் வயல்களும் தென்னைகளும் மாமரங்களும் நிறைந்த அழகிய பிரதேசம் மிருசுவில்.யாழ் நகரத்திலிருந்து ஊரைப் பார்க்க மிருசுவில் கிராமத்தவர்கள், மூன்று குழந்தைகள் உட்பட எட்டுப் பேர், 2000ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 19ஆம் திகதி 10 மணியளவில் வந்தனர்.
ஒரு சிறுவன் கொய்யாப் பழமொன்று பறித்துத் தரும்படி சையாகக் கேட்டுள்ளான். கொய்யா மரத்தை நெருங்கியபோது கத்தியுடன் ஒரு இராணுவத்தினனும் துப்பாக்கியுடன் ஒரு இராணுவத்தினனும் அவர்களை சூழ்ந்து கொண்டனர். பின்னர் மேலும் சில இராணுவத்தினரை அவர்கள் அழைத்து வந்தனர்.
மிருசுவில் சடலமொன்று புதைக்கப்பட்டதை கண்டனர். மீண்டும் ஊர் மக்களுடன் அந்த சடலத்தை அடையாளம் காண இவர்கள் வந்துள்ளனர். அத்துடன் உள்ளுர் அரச அதிகாரிகளின் அனுமதியுடன்தான் அவர்கள் வந்திருந்தனர். அங்கு வந்து புதைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் சடலத்தை அடையாளம் காண முற்பட்டபோது அவர்கள் இராணுவத்திடம் சிக்கினர். இலங்கை அரச படைகளால் சிறைப் பிடிக்கப்பட்டனர். ஏற்கனவே இராணுவத்தால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தை அடையாள காண முற்பட்டவேளையிலேயே இவர்களும் சடலாக்கப்பட்டனர்.
சடலமொன்றின் முகம் தேடச் சென்றவர்களை இராணுவத்தினர் சிறைப்பிடித்து சித்திரவதை செய்தவர். டிசம்பர் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட மக்கள் டிசம்பர் 20 வரை சித்திரவதை செய்யப்பட்டனர். அந்த அப்பாவிச் சனங்களின் அழு குரல்கள் எவருக்கும் கேட்கவில்லை.
மிருசுவில் மாதாவே எங்கள் அப்பாவிக் குழந்தைகளையாவது காப்பாற்று என்று அவர்கள் கூக்குரலிட்டனர். மிருசுவில் மாதாவும் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புச் சிறையில் சிக்கியிருந்தாள். குழந்தைகள் என்றும் பாராமல் இராணுவத்தின் சித்திரவதைகள் தொடர்ந்தன. மனித குலத்திற்கு விரோதமான இராணுவத்தின் கண்களில் குழந்தைகளும் பெண்களும் எப்படிப் பொருட்டாகும்?
தொடர் சித்திரவதை செய்யப்பட்ட நிலையில், குழந்தைகள் உட்பட எட்டுப்பேர் டிசம்பர் 20ஆம் திகதி இலங்கை அரச படைகளினால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஞானச்சந்திரன், சாந்தன், ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், மற்றும் வில்வராஜா பிரசாத் முதலிய எட்டுப் பேரே இலங்கை அரச படைகளினால் இனக் கொலை செய்யப்பட்டனர்.
அங்கிருந்த மலக் குழி ஒன்றினுள் அவர்களின் சடலங்களை இராணுவத்தினர் போட்டனர். இராணுவத்திடம் அகப்பட்ட பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் அதிஷ்டவசமாக அங்கிருந்து தப்பிச் சென்றார். அந்தக் கொடூரம் மிக்க மிருசுவில் படுகொலையின் ஒற்றைச் சாட்சியாக அவர் தப்பி வந்தார். உயிருக்காக இறைஞ்சிய நிலையில், குழந்தைகள் என்றும் பாராது இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதிக்காக அந்தச் சாட்சி தப்பி வந்திருக்க வேண்டும்.
மலக்குழி ஒன்றை நோக்கித் தள்ளியபோது மகேஸ்வரன் மயக்கமடைந்துள்ளார். இராணுவத்தினர் கத்தி கூச்சலிட்டு மகிழ்ந்தைமை தனக்கு நினைவிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு மகேஸ்வரன் கூறியிருந்தார். அவர் கட்டியிருந்த சாரத்தால் .இராணுவத்தினர் கைகளை இறுக்கமாக கட்டினர். தனக்கு மரணம் நிகழப்போகிறது என்று உணர்ந்த அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார். மாலை ஆறு மணியளவில் குறுக்கு வழிகளின் ஊடாக மகேஸ்வரன் தப்பிச் சென்றார். அவ் இடத்திற்குப் புதிய இராணுவத்தினரால் மகேஸ்வரனை குறி வைத்து சுட்டுவிட இயலவில்லை.
மகேஸ்வரனின் வாக்குமூலங்களை அடுத்தே, இனக் கொலை செய்யப்பட்ட அந்த மக்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. முதற்கட்டமாக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன. அத்துடன் அங்கு முதன் முதலில் காணப்பட்ட பெண்ணின் சடலம் குறித்தும் வாக்குமூலம் அளிக்கப்பட்டது. உண்மையில் அந்தப் பெண்ணுக்கு நடந்த அநீதியை நீதிமன்றத்தினால் கண்டுபிடிக்க இயலவில்லை.
அவள் யார்? அவளுக்கு என்ன நடந்தது என்பதை இராணுவத்தினர் மறைத்திருந்தனர். அதனை நீதிமன்றத்தினாலும் கண்டுபிடிக்க இயலவில்லை. அவளுக்கு மிக மோசமான முறையில் வன்முறையும் மரணமும் நிகழ்ந்திருக்க வேண்டும். அவளின் சடலத்தை இந்த மக்கள் தேடி வந்தமைக்காகவே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அவளின் சடலத்தை கண்ட சாட்சி என்பதற்காகவே இந்த மக்கள் அழிக்கப்பட்டார்கள். இந்த மக்களை படுகொலை செய்த இராணுவத்தினர் அவளின் சடலத்தையும் இல்லாமல் செய்து குற்றத்திலிருந்து தப்பிக் கொண்டனர்.
இந்தப் படுகொலையில் மூன்று பதின்ம வயதுச் சிறுவர்களும் ஐந்து வயதுச் சிறுவனான வில்வராசா பிரசாத்தும் அடங்குவதாக யாழ் மாவட்ட வைத்திய அதிகாரி சி. கதிரவேற்பிள்ளை சாட்சியமளித்தார். அத்துடன் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 5 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் கழுத்து அறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் யாழ் மாவட்ட வைத்திய அதிகாரி சி. கதிரவேற்பிள்ளை தனது சாட்சியத்தில் கூறினார். இந்தப் படுகொலை குறித்து உரிய வகையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அன்றைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கடிதம் எழுதினார்.
அத்துடன் மனித உரிமை அமைப்புக்களும் இப் படுகொலை குறித்து இலங்கை அரசாங்கம் பக்கச் சார்பற்ற முறையில் விசாரணை நடாத்தி, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை வழங்கி, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தது. இந்தப் படுகொலை ஐ.நாவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.
ஏற்கனவே ஐந்து இராணுவத்தினரை கைது செய்திருந்த இலங்கை அரசு, இவ் அழுத்தங்களினால் 14 இராணுவத்தினரை கைது செய்தனர். சாவகச்சேரி நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணை பின்னர் 2002 மே, 2இல் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதுடன் நவம்பர் 27இல் இது தொடர்பில் விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவொன்றை இலங்கை சட்ட மா அதிபர் நியமித்திருந்தார். ஜூரிகள் எவரும் இன்றிய நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அரசு அறிவித்தது.
மகேஸ்வரனின் வாக்குமூலத்தின்படி மலக்குழியை சென்று பார்வையிட்டபோது அதற்குள் ஆடு ஒன்று இறந்தமைக்கான அடையாளங்கள் இருந்தன. இராணுவத்தினர் அங்கிருந்து உடல்களை அப்புறப்படுத்தியிருந்தனர். எனினும் கஜபாகு அணியை சேர்ந்த இராணுவச் சீருடை ஒன்று அப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. ஆட்டை கொன்றவர்களைக் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து, கொலைக் குற்றவாளிகளை மகேஸ்வரன் அடையாளம் காட்டினார்.
பின்னர் இராணுவக் குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி 500 மீற்றர் தூரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு நான்காவது நாளில் கண்டுபிடிக்கப்பட்டது. மலக்குழியில் இருந்த இரத்தக்கறையை பகுப்பாய்வு செய்தபோது அது மிருகங்களின் இரத்தக்கறை அல்ல என்றும் மனிதர்களின் இரத்தக்கறை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் ஆட்டை கொன்றது யார் என்பதை கண்டுபிடித்த பின்னரே, அங்கு கொல்லட்டவர்கள் தொடர்பான குற்றவாளி இரத்நாயக்கா சிக்கிக் கொண்டார்.
குற்றம் சாட்டப்பட்ட இராணுவ உறுப்பினர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்த வழக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர, எச்.என்.பி.பி.வராவௌ, சுனில் ராஜபக்ச ஆகிய மூன்று நீதிபதிகளும் பிரதி சட்டமா அதிபர் சரத் ஜயமான மற்றும் அதிகாரிகள் 2011 ஏப்ரல் 28ஆம் திகதி மிருசுவில் பகுதியில் கொலை இடம்பெற்ற பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடம், குற்றவாளிகளை அடையாளம் காண அணிவகுப்பு நடந்த நீதிமன்ற வளாகத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இதனிடையே, புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் தொடர்பாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சாட்சியத்துக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 2011 ஜூலை 27 வழக்கு இடம்பெற்றது. இதன்போது புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த ஆடைகள் அந்த படுகொலையில் கொல்லப்பட்ட நபர்கள் அணிந்திருந்தவை தான் என்பதை அரச பகுப்பாய்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதி பகுப்பாய்வாளர் டி.எச்.எல். ஜயமான்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார். கதிரேஸ் ஞானவிமலன், ஞானவிமலன் ரவிச்சந்திரன் ஆகியோரது உடைகளே என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த சாவகச்சேரி மாவட்ட நீதவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர், குற்றவாளிகளை அடையாளம் கண்ட அன்றைய பதில் நீதவான் சுப்பிரமணியம் கந்தசாமி, பொலிஸ் தரப்பில் ஆரம்ப விசாரணைகளை நடத்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சமரக்கோன் பண்டார ஆகியோரது வாக்குமூலங்களையும் நீதிபதிகள் பதிவு செய்தனர். இவர்களும் கொலை இடம்பெற்ற பகுதிக்கு நீதிபதிகளுடன் சென்று நடந்த சம்பவத்தை குறித்து எடுத்துரைத்தனர். நீதிபதிகளின் தீர்ப்புக்காக அனைவரும் காத்திருந்தனர்.
இந்த நிலையில் 2015, அதாவது கடந்த வரும், ஜூன் 25ஆம் திகதி அன்று இப் படுகொலை தொடர்பான தீர்ப்பு வெளியிடப்பட்டது. எட்டுத் தமிழ் மக்களையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்தவர் என்ற குற்றசாட்டில் இலங்கை இராணுவத்தை சேர்ந்த சுனில் ரத்நாயக்க என்பவருக்கு மரண தண்டனையை கொழும்பு நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்பட்ட நான்கு இராணுவத்தினரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்திருந்தது.
ஈழத்தில் கடும் போர் ஓய்ந்திருந்த காலம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் போர் நிறுத்த சமாதான முயற்சிகள் நடந்த நாட்கள். அப்படி ஒரு நாட்களில்தான் அந்தக் கொடுஞ்செயல் இடம்பெற்றது. இலங்கை அரச படைகள் சமாதானத்திற்கு எத்தகைய மதிப்பை கொடுத்தார்கள் என்பதையும் சமாதானத்தின்மீது எத்தகைய ஈடுபாடு கொண்டவர்கள் என்பதையும் உலகிற்கு உணர்த்தியதொரு நிகழ்வாகவும் இதனைக் கருதலாம்.
மரண தண்டனையை எதிர்கொள்கின்ற அளவிற்கு தான் மிக மோசமான குற்றத்தில் ஈடுபடவில்லை என ரட்ணாயக்க பதிலளித்தார். இராணுவத்தில் சேவையாற்றிய போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்களுக்குள் ஊடுருவிச் சென்று பல்வேறு வீரச் செயல்களைப் புரிந்ததாகவும் ஏனைய இராணுவ வீரர்கள் இவற்றைச் செய்வதற்கு அச்சப்படுகின்ற போது கூடத் தான் துணிச்சலாக முன்னேறிச் சென்றதாகவும் ரத்னாயக்க கூறினார். அதாவது தனக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்கள் தவறானவை என ரத்னாயக்க நியாயப்படுத்த முயன்றுள்ளார்.(சிலோன் டுடே, தமிழாக்கம் நித்தியபாரதி)
இலங்கை அரச படைகளின் மனங்களில் தமிழ் மக்களின் உயிர் குறித்து என்னவிதமான மதிப்பீடு இருக்கிறது என்பதை இரத்நாயக்கவின் வாக்குமூலங்கள் உணர்த்துகின்றன. இவ் வகையிலான எண்ணங்கள் எத்தகைய அரசியல், மேலாதிக்க சிந்தனைகளிலிருந்து ஏற்படுகின்றன என்பதையும் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. இராணுவத்தில் தமிழர்களை படுகொலை செய்வதை ஒரு இராணுவன் கடமையாகவே ரத்னநாயக்க கருதியுள்ளார். இதுவே இலங்கை இராணுவத்தின் மனப்போக்கு என்பதையே உணர முடிகிறது.
மிருசுவில் படுகொலை இடம்பெற்று 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் படுகொலையால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டன. சந்திரிக்கா காலத்தில் சர்வதேச நெருக்கடிகளை தவிர்க்கும்பொருட்டு வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் 15 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்கப்படவில்லை. அத்துடன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தும் காலத்தில் இவ் வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியிடப்பட்டது. இனக்கொலைகளின் கறைகளின் மூலம் இனக்கொலைகளை கழுவ இயலாது.
tamilwin info tamil info on-line tamil win info jaffna info proper now jaffna proper now jvpnews jvp info sri lanka tamil info tamilmirror virakesari colombo tamil info newsfirst lanka proper now lanka info lankasri info Hiru Data Tamil Sooriyan Fm Data IBC Tamil Sri Lanka Tamil Data News1st JVP Sri Lanka IBC Data Latest Data Sri Lanka Data Breaking Data dailymirror Oneindia Maalaimalar Dinakaran Ada Derana trincomalee info vavuniya info batticaloa info gossips tamilcnn Aluth Jobs Uncover latest vacancies in Sri Lanka lanka sri info batti info CINEMA NEWS TAMIL job info Native Data mannar tamil info