முகாமில் இராணுவ சிப்பாய் பலி-4 ராணுவம் கைது..!

ஹொரண, தொம்பாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் போது உயிரிழந்த இராணுவ வீரரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே முகாமைச் சேர்ந்த 4 இராணுவத்தினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், நீதவான் விசாரணைகளின் போதும் முரண்பட்ட வாக்குமூலங்களை வழங்கியமையினால் குறித்த படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 இராணுவத்தினருடன் உயிரிழந்த இராணுவ வீரர் முகாமில் மதுபான விருந்து நடத்தியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் இராணுவ முகாமில் உள்ள குளத்தில் நீராடும்போது நீரில் மூழ்கி குறித்த இராணுவ வீரர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அப்போது உயிரிழந்த இராணுவ வீரரின் கையடக்கத் தொலைபேசியை யாருக்கும் தெரியாமல் ஏனைய இராணுவ வீரர்கள் குளத்தில் வீசியிருப்பது தெரியவந்துள்ளது.

மறுநாள் (ஜனவரி 28) இறந்த இராணுவ வீரர் உடல் பயிற்சி அணிவகுப்பில் கலந்து கொள்ளாததால், அவரைத் தேட இராணுவம் முடிவு செய்து, இதுபற்றி அவரது வீட்டுக்கும் அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 4 இராணுவ வீரர்களும் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.