ருவாண்டாவில் புலம்பெயர் தமிழ் அகதிகளுக்கு பாலியல் தொல்லை-நரக வேதனை அனுபவிக்கும் தமிழ் பெண்கள்..!

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சிதீவு அகதிகளை நீண்ட காலம் தடுத்து வைப்பதற்கு ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறிய பின்னரும் அதே நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட பின்னர், அகதிகள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமை பற்றிய அறிக்கைகள் வெளிவந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டியாகோ கார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளதாக The New Humanitarian கடந்த மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.

23 வயதான இலங்கை தமிழ் பெண் ஒருவர் கிழக்காபிரிக்க நாட்டின் தலைநகரான கிகாலியில் உள்ள ருவாண்டா இராணுவ மருத்துவமனையில் ஒக்டோபர் 18ஆம் திகதி தாதி ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறினார்.

இவ்வாறான சம்பவங்களுக்கு பின்னரும் அகதிகளை “மூன்றாவது நாட்டில்”மீள்குடியேற்றம் செய்ய பிரித்தானியா ஏற்பாடு செய்ய காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு ஆண் புகலிடக் கோரிக்கையாளர்களும் பல துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இரண்டு பேரும் ஒகஸ்ட் மாதம் தங்களுடைய தங்குமிடத்திலிருந்து ருவாண்டா இராணுவ வைத்தியசாலைக்கு நடந்து கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவர்களைப் பின்தொடர்ந்து துன்புறுத்தியதாக” கூறியுள்ளனர்.

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சியாவிற்கு கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனத்தின் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த தீவிற்கு இலங்கை புகலிட் கோரிக்கையாளர்கள் சென்றப் பின்னர், முதல் முறையாக அதிகாரிகள் அங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

“டியாகோ கார்சியா ஒரு இராணுவத் தளத்தைக் கொண்ட ஒரு தீவு ஆகும், அங்கு எந்த குடிமக்களும் இல்லை, மேலும் இந்த குழுவின் நீண்ட கால வசிப்பிடத்திற்கு ஏற்ற இடம் அல்ல” என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

சர்வதேச சட்டத்திற்கு இணங்க, சர்வதேச பாதுகாப்பு தேவைப்படுபவர்களுக்கான தீர்வுகளைப் பாதுகாக்கவும் நாங்கள் பிரித்தானியாவை தொடர்ந்து கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், தீவின் நிலைமையை “நரகமானது” என்று விபரிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதேசத்தின் அசாதாரண சட்ட நிலை அங்குள்ளவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல தற்கொலை முயற்சிகள், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடந்துள்ளன.

இலங்கை புலம்பெயர்ந்தோர் கனடாவுக்குச் செல்ல முயன்றபோது அவர்களின் படகு கடலில் சிக்கியதை அடுத்து, அக்டோபர் 2021 இல் முதல் குழு டியாகோ கார்சியாவில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.