வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் ஆளுநரின் சிநேகபூர்வ மக்கள் சந்திப்பின் மற்றுமொரு கட்டம் வடமராட்சியில் நடைபெற்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
வட மராட்சி பிரதேசத்தில் காணப்படும் உள்ளக வீதிகள் சீரின்மை தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள் கௌரவ ஆளுநரிடம் இதன்போது முன்வைக்கப்பட்டன. அத்துடன் விளையாட்டு மைதானம் சீரின்மை, வீதிகளுக்கான மின் விளக்குகள் பொருத்தப்படாமை, சனசமூக நிலையங்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் ஆளுநரிடம் பொதுமக்களால் எடுத்துக்கூறப்பட்டது.
மக்களின் தேவைகளில் உடனடியாக நிறைவேற்றக்கூடிய விடயங்களை உரிய நடைமுறைகளை பின்பற்றி துரிதகதியில் நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு ஆளுனரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
வட மராட்சி பிரதேச மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து, தகவல்கள் திரட்டப்பட்டு கௌரவ ஆளுநரின் அனுமதியுடன் உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என இதன்போது உள்ளுராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.