நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினைத் தொடர்ந்து மலையகப்பகுதியில் குடும்பப் பொருளாதாரம் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என விடிவெள்ளி மகளிர் அமைப்பின் பெண்கள் நேற்று (23) ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பல குடும்பங்கள் அன்றாட உணவுகளைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அவதிப்படுகின்றனர். பல குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளின் கல்வித்தேவையினைப் பூர்த்தி செய்ய முடியாது இடர்பட்டு வருகின்றனர்.
குடும்ப சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு பலபெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று துயரங்களை அனுபவித்து நாடு திரும்புகின்றனர்.
இதனால் இன்று குடும்பங்கள் மகிழ்ச்சியும் நிம்மதியுமற்ற நிலையில் தான் உள்ளன. ஆனால் எமது மக்கள் பிரதிநிதிகளால் வருடமொருமுறை மார்ச் 8 ஆம் திகதியினை மகளிர் தினத்தினை கொண்டாடிவிட்டு அவர்கள் காலம் காலமாக ஏமாற்றப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளனர்.
காலம் காலமாக எமது அரசியல் தலைவர்கள் தேர்தல் வரும்போது உங்களுக்கு வீட்டுரிமை பெற்றுத் தருகிறோம் காணியுரிமைப் பெற்றுத் தொருகிறோம் 100 பேருக்கு தொழில்வாய்ப்பு 500 பேருக்கு சுயதொழில், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்போம் என்றெல்லாம் சொல்லி எம்மை காலம் காலமாக ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.
சலுகைக்காக இனியும் ஏமாற மாட்டோம், ஆகவே இந்நிலை மாற வேண்டும் மலையகத்தில் இருக்கின்ற குடும்பங்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சரியான வேலைத்திட்டங்களை இந்த மக்கள் பிரதிநிதிகள் இந்த மகளிர் தினத்தில் அறிவிக்கவேண்டும் இல்லாவிட்டால் இவர்களுக்கு எதிராக பெண்கள் அணிதிரள்வது எவராலும் தடுக்கமுடியாது எனவும் எதிர்வரும் காலங்களில் வாக்களிப்பதையும் தவிர்க்கப்போவதாக தெரிவித்தனர்.