குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல் தற்போதுவரை பரபரப்பாக சென்றுகொண்டு இருந்தாலும், இதை பற்றி யோசிக்காமல், தனது வீட்டில் வேலை செய்யும் பெண் 4 வருடங்களை நிறைவு செய்ய உள்ளதாக கூறி அவருக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளார் வி.ஜே.மணிமேகலை.
தமிழ் சின்னத்திரையின் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவராக இருக்கும் வி.ஜே.மணிமேகலை, எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், திருமணத்திற்கு பின் சின்னத்திரையில், இருந்து விலகினார். ஓரிரு ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த மணிமேகலை விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசனில் தொகுப்பாளினியாக களமிறங்கிய மணிமேகலை கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கு காரணம் வி.ஜே.பிரியங்காதான் என்று தகவல் வெளியானதை தொடர்ந்து, சமூகவலைதளங்களில் மணிமேகலைக்கு அதரவு அதிகரித்திருந்த நிலையில், விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த இரு வாரங்களாக சின்னத்திரை வட்டாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வி.ஜே.மணிமேகலை தனது வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு விருந்து வைத்தது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். குக் அக்கா என்று அழைக்கப்படும் அவரது பெயர் லட்சுமி. மணிமேகலை தனது கணவர் ஹூசேனுடன் கடந்த 2021-ம் ஆண்டு புது வீட்டில் குடியேறினார். அவர்கள் குடியேறியபோது அந்த வீட்டிற்கு வேலை செய்ய வந்தவர் தான் இந்த லட்சுமி.
லட்சுமி அக்கா தங்களிடம் வேலைக்கு சேர்ந்து 4 ஆண்டுகள் தொடர உள்ளதால், அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறோம் என்று கூறி மணிமேகலை வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், லட்சுமி அக்கா வருவதற்கு முன்பே, சமையல் செய்து, அவர் வந்தவுடன், அவருக்கு சாப்பாடு பரிமாறுகின்றனர். அதன்பிறகு ஷாப்பிங் போகலாம் என்று சொல்லி, தங்களது காரில் அவரை ஒரு துணிக்கடைக்கு அழைத்து சென்று விலை உயர்ந்த புடவை வாங்கிக்கொடுத்துள்ளனர். தினமும் சைக்கிளில் தான் வருவேன். இனி இந்த புடவையை கட்டிக்கொண்டு சைக்கிளில் வருவேன் என்று லட்சுமி அக்கா சொல்கிறார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தனது வீட்டில் வேலை செய்பவரை மணிமேகலை இப்படி கவனித்துக்கொள்கிறாரே என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.