வெள்ளநீரை வெளியேற்றும் பணியின் போது குழப்பம்; பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் !

வாய்க்கால் ஒன்றை வெட்டி துப்பரவு செய்யும் பணியின் போது இரு குழுக்களுக்கு இடையில் ஏற்படவிருந்த மோதலை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மதுரங்குளி – கஜூவத்தை, பரியாரிதோட்டம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நின்பதுடன் இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர்.

இந்நிலையில், தனியாருக்கு சொந்தமான தென்னந் தோட்டத்தின் நடுவே வெள்ளநீர் வெளியேறும் பழமை வாய்ந்த வாய்க்காலை பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அதனை வெட்டி, துப்புரவு செய்யும் பணியையும் நேற்றையதினம்(02) மாலை முன்னெடுத்தனர்.

இதன்போது, அங்கு மூன்று உழவு இயந்திரங்களில் இரும்புக் கம்பிகள், கம்புகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன், வருகை தந்த அந்த தோட்ட உரிமையாளரிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் என கூறப்படும் 20 இற்கும் மேற்பட்டவர்கள் , அங்கு பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் வாய்க்காலை வெட்டிக் கொண்டிருந்த பிரதேச மக்களை விரட்டியடிக்க முற்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பிரதேசவாசிகளுக்கும், உழவு இயந்திரத்தில் வருகை தந்த குழுவினர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த மதுரங்குளி பொலிஸார், கஜூவத்தை – பரியாரி தோட்டம் ஆகிய கிராம மக்களுக்கும், உழவு இயந்திரத்தில் வருகை தந்தவர்களுக்கும் இடையில் ஏற்படவிருந்த பாரிய மோதலை கட்டுப்படுத்துவதற்கு வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இவ்வாறு பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய போது, அங்கு கூடிநின்ற பிரதேச மக்கள் பொலிஸாருடன் முரண்பட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து, மதுரங்குளி பொலிஸாருக்கு மேலதிகமாக முந்தல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், பதற்ற நிலைமை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தோட்ட உரிமையாளரிடம் இருந்து சில சலுகைகளைப் பெற்றுக் கொண்டு, தங்களை அச்சுறுத்தும் வகையில் மதுரங்குளி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் , இந்த விடயத்தில் பொலிஸார் பக்கச் சார்பாக நடந்துகொண்டதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனினும், இரண்டு தரப்பினர்களுக்கிடையில் ஏற்படவிருந்த பாரிய மோதலைத் தடுப்பதற்காகவும், பதற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவுமே மதுரங்குளி பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார தெரிவித்தார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், பிரதேச மக்களை தாக்குவதற்கு வருகை தந்த குழுவினரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதுடன், அவர்கள் பயணித்ததாக கூறப்படும் மூன்று உழவு இயந்திரங்கள் மற்றும் இருப்புக்கு கம்பிகள், கம்புகள், கூரிய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார மேலும் தெரிவித்தார்.