நிலவேம்பு கசாயம் – நிலவேம்பு குடிநீர் என்கிற பாரம்பரிய அருமருந்து… எக்கச்சக்க பலன்கள் தரும்!

நிலவேம்பு கசாயம் / நிலவேம்பு குடிநீர் – டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்ததை அடுத்து எங்கு பார்த்தாலும் நிலவேம்பின் பெயர் அடிபடுகிறது.

Andrographis paniculata என்ற தாவரவியல் பெயர் கொண்ட நிலவேம்பு கசாயம் கசப்புச் சுவையுடனும் வெப்பத்தன்மையுடனும் உள்ளது.

இன்றைக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சலைக் குணப்படுத்தத் தரப்படும் நிலவேம்பு கசாயம் என்பது வெறும் நிலவேம்பினால் மட்டும் தயாரிக்கப்பட்டதல்ல. அதில் ஒன்பது வகையான மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

நிலவேம்பு கசாயம் - நிலவேம்பு குடிநீர் என்கிற பாரம்பரிய அருமருந்து... எக்கச்சக்க பலன்கள் தரும்! - Dinamani news - நிலவேம்பு கசாயம், நிலவேம்பு குடிநீர், நிலவேம்புக் குடிநீர்

நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொடியில் நிலவேம்புடன் சுக்கு, பற்பாடகம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு, பேய்ப்புடல், மிளகு, சந்தனம் உள்ளிட்ட மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன.

பொதுவாக வெறும் நிலவேம்பு இலைகள் அல்லது அதன் வேர் அல்லது முழுத் தாவரத்தையும் கொதிக்க வைத்து குடித்து வந்தாலே காய்ச்சல் குணமாவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் கல்லீரல் தொடர்பான நோய்கள், பசி மந்தம், சொறி சிரங்கு போன்றவற்றைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்த ஒரு மூலிகை.

தலையில் நீர் கட்டுதல், தலைவலி, தும்மல், இருமல் போன்றவற்றையும் குணப்படுத்தக்கூடியது. தைராய்டு, கர்ப்பப்பைக் கட்டிகளையும் நிலவேம்பு குணப்படுத்தும்.

நிலவேம்பின் பயன்கள் ஒருபுறமிருக்க அதில் சேர்க்கப்படும் சுக்கு நல்லதொரு வலிநீக்கி. உலர்ந்த இஞ்சியே சுக்கு. பொதுவாக தலைவலி வரும் நேரங்களில் சுக்கை நீர்விட்டு இழைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் அடுத்த சில நிமிடங்களில் குணமாகும்.

சுக்குடன் தனியா, மிளகு, ஏலக்காய் சேர்த்து பொடியாக்கி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் சேர்த்துக் குடித்தால் மூக்கடைப்பு, சளித்தொல்லை விலகுவதுடன் உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை சேர்த்துக் கசாயமாக்கி தினமும் மூன்றுவேளை வீதம் இரண்டு நாள்கள் குடித்து வந்தால் விஷக்காய்ச்சல் குணமாகும்.

அடுத்தது பற்பாடகம்… இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. குறிப்பாக குடிநீரில் இது பயன்படுத்தப்படுகிறது.

நிலவேம்பு கசாயம் - நிலவேம்பு குடிநீர் என்கிற பாரம்பரிய அருமருந்து... எக்கச்சக்க பலன்கள் தரும்! - Dinamani news - நிலவேம்பு கசாயம், நிலவேம்பு குடிநீர், நிலவேம்புக் குடிநீர்

நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் இந்தப் பற்பாடகத்தை நன்றாகச் சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி ஐந்து கிராம் அளவு எடுத்து அதை அம்மியில் வைத்து அரைத்து மோரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் சீதபேதி, காய்ச்சல் கட்டுக்குள் வரும்.

பற்பாடகத்தின் பசுமையான இலைகளைப் பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் கண் பார்வை சீராவதுடன் உடல் நாற்றம், சூடு தணியும்.

நிலவேம்புக் குடிநீர் பொடியுடன் வெட்டிவேரும் சேர்க்கப்பட்டுள்ளது. புல் வகையைச் சேர்ந்த இந்தத் தாவரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. இது குளிர்ச்சி தருவதுடன் நறுமணம் மற்றும் உற்சாகத்தைத் தரக்கூடியது.

வெட்டிவேரை நன்றாக உலர்த்திப் பொடியாக்கி 200 மி.லி முதல் 400 மி.லி அளவு தண்ணீரில் ஊறப்போட வேண்டும். ஊறிய அந்த நீரை 30 மி.லி முதல் 65 மி.லி அளவு குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்கள் கட்டுப்படும். வெட்டி வேரால் செய்யப்படும் விசிறியைக் கொண்டு வீசி வந்தால் உடல் எரிச்சல், தாகம் நீங்குவதுடன் மனமகிழ்ச்சி ஏற்படும்.

விலாமிச்சை வேர் மணமுள்ளது மட்டுமல்ல மிகவும் குளிர்ச்சி நிறைந்தது. இதனால் முடி கொட்டுதல் பிரச்னை நீங்கி தலைமுடியை வளரச் செய்யவும் தயாரிக்கப்பட்டு எண்ணெயில் விலாமிச்சை வேர் சேர்க்கப்படுகிறது.

மேலும் வெயில் காலத்தில் ஏற்படும் வெப்ப நோய்களை விரட்டக்கூடியது. மண்பானைத் தண்ணீரில் வெட்டிவேருடன் விலாமிச்சை வேரையும் சேர்த்து அருந்தி வந்தால் தாகம் தீர்ப்பதுடன் கோடை நோய்கள் குணமாகும்.

நிலவேம்பு கசாயம் - நிலவேம்பு குடிநீர் என்கிற பாரம்பரிய அருமருந்து... எக்கச்சக்க பலன்கள் தரும்! - Dinamani news - நிலவேம்பு கசாயம், நிலவேம்பு குடிநீர், நிலவேம்புக் குடிநீர்

கோரைக் கிழங்கு சிறுநீர், வியர்வையைப் பெருக்குவதுடன் உடல் பருமனைக் குறைக்க உதவும். கோரைக்கிழங்கை பாலுடன் சேர்த்து அரைத்துப் பசையாக்கி தலையில் பூசினால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.

வலிப்பு நோய் மற்றும் காய்ச்சல் போன்றவை குணமாகும். கோரைக் கிழங்குப் பொடியை அரை டீஸ்பூன் வீதம் காலை மற்றும் இரவு உணவுக்கு முன் பால் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம், வயிற்றுப்போக்குக் குணமாகும்.

பேய்ப்புடல் காய்ச்சலைத் தணிக்கக்கூடியது. இதன் இலைகளை அரைத்து மேல்பூச்சாக பூசினால் தலையில் திட்டுதிட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழச்செய்யும் புழுவெட்டு பிரச்னை குணமாகும். பேய்ப்புடல் இலைகளை மையாக அரைத்து தோல் நோய்களின் மீது பூசி வந்தால் எக்ஸிமா எனப்படும் தோலில் நீர் வழியும் கொப்பளங்களோடு கூடிய நமைச்சல் விரைவில் குணமாகும்.

பேய்ப்புடல் இலைகளைத் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆறாத புண்கள், நாற்றமெடுத்து புழு வைத்த புண்கள், சர்க்கரை நோயால் வந்த கட்டிகள் போன்றவற்றின்மீது ஊற்றி வந்தால் விரைவில் குணமாகும்.

நிலவேம்பு கசாயம் பொடியில் மிளகுக்கும் ஓர் இடம் உண்டு. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துகளும் தயாமின், ரிபோபிளேவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. மிளகைப் பொடித்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூக்கு ஒழுகுதல் மற்றும் சளித்தொல்லைகள் அகலும்.

சளித்தொல்லை உச்சத்தில் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்துப் பொடித்து அதில் அரை டீஸ்பூன் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் குணமாகும். தலைவலி, தலைபாரம் இருந்தால் மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் அவை சரியாகும்.

சந்தனமும் காய்ச்சலுக்கு அருமருந்தாகச் செயல்படுகிறது. சந்தனத்தூள் அரை டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு பாதியாகும் அளவு காய்ச்சி வடிகட்டி 50 மி.லி அளவு மூன்று வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

அரை டீஸ்பூன் சந்தனத்தூளை அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும். சந்தனத்தூள் இரண்டு டீஸ்பூன் எடுத்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சிக் குடித்து வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

ஆக, நிலவேம்புக் குடிநீர் செய்யும் பொடியில் சேரக்கூடிய ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மருத்துவக் குணங்கள் உள்ளன. இவற்றை ஒன்றிணைத்து குடிநீராகச் செய்து அருந்தி வருவதன்மூலம் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் குணமாவதுடன் உடல்வலி, சோர்வு நீங்கி உற்சாகம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.