பெண் காவல்துறை அதிகாரி உட்பட மூவரை பலியெடுத்த கோர விபத்துக்கள்

மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீரிகம – பஸ்யால வீதியின் துமுன்னேகெதர பிரதேசத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில், அம்பேபுஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த வரகாபொல காவல் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய பெண் காவல்துறை உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான பெண் காவல்துறை அதிகாரி வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, புலஸ்திபுர – தம்பாலா – லங்காபுர புறவழிச்சாலையின் தம்பலா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் அதே திசையில் சென்ற டிப்பர் வாகனத்தை முந்திச் சென்றதில் மோட்டார் சைக்கிள் டிப்பருக்கு முன்னால் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

அல்கிலால்புர – தம்பலா பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பொரளை – பேஸ்லைன் வீதியின் மவுண்ட் மேரி சந்திக்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு 08 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்