பொலிஸ் உயரதிகாரியின் சண்டித்தனம்-பின்னர் நேர்ந்த சம்பவம்..!

உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரியின் தாக்குதலில் பிரதேசவாசிகள் இருவர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலால் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த முந்தலம் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

புத்தளம் உடப்பு பிரதேசத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேசவாசிகள் குழுவிற்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலின் போது, ​​அதிகாரி மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதையும், கூடியிருந்தவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டுவதையும் நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் பயணித்த காரின் மீது பிரதேசவாசிகள் எச்சில் துப்பியதாக கூறி உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் உடப்பு பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த முந்தலம் பொலிஸ் அதிகாரிகள் அங்கு அழைக்கப்பட்டனர்.

தாக்கப்பட்ட நபரொருவர் கருத்து தெரிவிக்கையில்

“ஹெட்லைட் போட்டுட்டு ஒரு கார் வந்தது.. விஐபி லைட்டுகளும் எரிந்தது. பொலிஸாரே காரில் வந்தனர். நானும் இன்னும் சிலரும் ஹெட்லைட் போட வேண்டாம் டிம் பண்ணி வர சொல்லி சத்தம் போட்டோம். பின்னர் நான் மீன் வாடிக்கு சென்றேன். அங்கு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் உடப்பு பொலிஸார். அதில் ஒருவர் என் கான்னத்தில் அரைந்தார். பின்னர் என் நெஞ்சி பகுதியில் தாக்கினர். வலியால் பின்னர் கீழே விழுந்தேன். ஏன் அடிக்கிறாய் என்று கேட்டபோது. எங்களை, அவர்கள் கடுமையாக திட்டினர்.” என்றார்.

தாக்குதலில் காயமடைந்த இருவர் உடப்பு கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் பொலிஸ் அதிகாரி ஒருவரும் உடப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அநாகரீகமாக நடந்து கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.