வடக்கில் சூரிய மின்சக்தி திட்டம்-எரிசக்தி அமைச்சர் சொல்வதென்ன..!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மின் உற்பத்தி அபிவிருத்தியால் அனலைத் தீவு,நெடுந்தீவு மற்றும் நயினாத்தீவு பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கல திட்டத்துக்கு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

வடக்கு மாகாணத்தில் சீன நிறுவனத்துக்கு சூரிய மின்கல திட்டம் வழங்கப்படவுமில்லை, சீன நிறுவனம் அவ்வாறான கோரிக்கைகள் எதனையும் விடுக்கவில்லை. அதேபோல் வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கல திட்டத்தை முன்னெடுக்க அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

வடக்கில் சூரிய மின்கல திட்ட அபிவிருத்தியில் அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மின்னலகுக்கு 50 ரூபா கிடைக்கப்பெறும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிடுகிறார். ஊடகங்கள் ஏதும் இவ்வாறு பொய்யான செய்தியை வெளியிடவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதானி நிறுவனம் அவரிடம் தனிப்பட்ட முறையில் இவ்வாறு யோசனைகளை முன்வைத்ததா? என்பதை நாங்கள் அறியவில்லை.

வடக்கு மாகாணத்தில் மின்னுற்பத்தி திட்டத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதற்கு 10 மில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் வடக்கு மாகாணத்தில் மின்னுற்பத்தி திட்டத்தை மேம்படுத்த 11 மில்லியன் டொலர் நிவாரணத்தை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு விலைமனுகோரல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய நிவாரணத்தினால் வடக்கு மாகாணத்தில் அனலை தீவு, நெடுந்தீவு மற்றும் நயினைத்தீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்துக்கு அரசாங்கம் ஒரு சதம் கூட செலவழிக்க தேவையில்லை. அத்துடன் எதிர்காலத்திலும் செலவழிக்க தேவையில்லை.இவ்வாறான நிலையில் இந்த திட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்.

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். சுற்றுச்சூழல் மாசுப்படுவதாக இருந்தால் காற்றாலை திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்கினாலும் பாதிப்பு ஏற்படும் தேசிய நிறுவனங்களுக்கு வழங்கினாலும் பாதிப்பு ஏற்படும்.

காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமாயின் காற்றாலை மின்னுற்பத்தி வலயத்தில் இருந்து மன்னார் பகுதியை நீக்க வேண்டும். ஒரு தரப்பினர் குறைகளை மாத்திரம் முன்னிலைப்படுத்தி அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்துகிறார்கள் என்றார்.