மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதல் என்பது 330 நாட்களை தாண்டி விட்டது. விரைவில் ஓராண்டை நிறைவு செய்யவுள்ளது. இதற்கிடையில் உயிரிழப்புகள் பெரிதும் அதிகரித்து வருவதால் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
தொடர் தாக்குதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் பாலஸ்தீனிய மக்களுக்கு தான் சிரமங்கள் அதிகம். காஸா முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகள் தகர்க்கப்பட்டு பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைப் பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை திருப்பியுள்ளது. குறிப்பாக தொடர்ந்து 7வது நாளாக இன்று நடத்திய தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆகஸ்ட் 28 – ஜெனின், துல்கரீம், துபாஸ் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதல் 10 பேர் உயிரிழந்தனர்.
- ஆகஸ்ட் 29 – மருத்துவமனைகளுக்கு செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. மருந்தக மையங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. 8 பேர் உயிரிழந்தனர்.
- ஆகஸ்ட் 30 – ஜெனின், பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.
- ஆகஸ்ட் 31 – ஜெனினின் அல்-ஜாப்ரியத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. அனைத்து கடைகளும் மூடப்பட்டது கவனிக்கத்தக்கது.
- செப்டம்பர் 1 – ஜெனின் நகரின் தெருக்கள் தரைமட்டமாக்கப்பட்டு கிடக்கின்றன. குடிநீர் மற்றும் கழிவுநீர் வரும் வழித்தடங்கள் சேதமடைந்துள்ளன. இப்பகுதியில் சுமார் 80 சதவீதம் பேர் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர்.
- செப்டம்பர் 2 – சரமாரியாக வீசிய குண்டுகளில் பத்திரிகையாளர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 3 – ஜெனின் நகரை முழுவதுமாக தரைமட்டமாக்க இஸ்ரேல் ராணுவம் மும்முரம் காட்டி வருகிறது.
தற்போது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. இதற்கேற்ப தற்காலிக போர் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவம் விட்டபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26 பேர் சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர்.