HbA1C டெஸ்ட் எதற்காக எடுக்கப்படுகிறது..? இதன் நார்மல் அளவு என்ன..?
டயாபடீஸ் மற்றும் ப்ரீ டயாபடீஸை கண்டறியவும் கட்டுக்குள் வைக்கவும் பயன்படுவதே HbA1C ரத்தப் பரிசோதனை. இதன் முழுப்பெயர் ஹீமோகுளோபின் A1C அல்லது HbA1C பரிசோதனை என அழைக்கப்படும்.
இந்த டெஸ்ட் மூலம் கடந்த மூன்று மாத காலத்திற்கான உங்கள் ரத்த சர்க்கரை அளவின் சராசரியை கணக்கிடலாம். அதாவது இந்த எளிமையான ரத்த பரிசோதனை உங்களுடைய கடந்த மூன்று மாதங்களின் சர்க்கரை அளவை காண்பிக்கும்.
நாம் வழக்கமாக எடுக்கும் ரத்த குளுக்கோஸ் டெஸ்ட் அந்த சமயத்தில் உள்ள சர்க்கரை அளவை மட்டுமே காண்பிக்கும். அதை விட இது வித்தியாசமானது.
HbA1C பரிசோதனை குறித்து பொதுவாக இருக்க கூடிய கேள்விகளும் அதற்கான பதில்களும் இதோ உங்களுக்காக…..
HbA1C பரிசோதனை என்றால் என்ன?
நாம் வழக்கமாக எடுப்பது போன்ற சாதாரன ரத்த பரிசோதனையான இது, கடந்த மூன்று மாதங்களில் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவின் சராசரியை கணக்கிடும். இதன் முடிவுகள் சதவிகிதத்தில் தான் காண்பிக்கும்.
இந்த A1C பரிசோதனை ப்ரீ டயாபடீஸ், டைப் 1 டயாபடீஸ், டைப் 2 டயாபடீஸ் ஆகியவற்றை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. இவை உங்கள் ரத்தத்தில் உள்ள க்ளைகோசைளேட்டட் ஹீமோகுளோபின் (ஹீமோகுளோபின் A1C அல்லது HbA1C எனவும் அழைக்கப்படும் ) அளவை கணக்கிடும்.
ஹீமோகுளோபின் என்றால் என்ன?
சிவப்பு ரத்த அணுக்களில் இருக்கும் புரதமே ஹீமோகுளோபின். இது நுரையீரலிலில் இருந்து ஆக்ஸிஜனை உடல்களில் உள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது. ரத்த ஓட்டத்தில் சர்க்கரை நுழைந்ததும், அவை ஹீமோகுளோபினோடு சேர்ந்து விடும்.
உங்கள் ரத்த ஓட்டத்தில் அதிகமான குளூக்கோஸ் இருந்தால், ஹீமோகுளோபினோடு அதிகப்படியான குளுக்கோஸ் ஒட்டிக்கொள்ளும். ஹீமோகுளோபினோடு இணைந்திருக்கும் குளுக்கோஸை குறிப்பிடுவதே க்ளைகோசைலேடேட் ஹீமோகுளோபின் (Glycosylated hemoglobin) என அழைக்கப்படுகிறது.
டயாபடீஸிற்கு எப்படி HbA1C பரிசோதனை பயன்படுகிறது?
சிவப்பு ரத்த அணுக்களில் எத்தனை சதவிகிதத்திற்கு சர்க்கரை (குளுக்கோஸ்) ஒட்டிக்கொண்டுள்ளது என்பதை A1C பரிசோதனை கணக்கிடும். உங்களுடைய பல மாதங்களின் சர்க்கரை அளவின் சராசரியை இச்சோதனை காண்பித்துவிடும்.
ஏனென்றால், சிவப்பு ரத்த அணுக்கள் உயிரோடு இருக்கும் வரை (3 மாதங்கள் வரையில்) ஹீமோகுளோபினில் குளுக்கோஸ் ஒட்டிக் கொண்டிருக்கும். இதன் முடிவுகள் நீண்ட கால சராசரியை கொண்டிருந்தாலும், அளவீடுகளில் கடந்த மாதத்தின் சர்க்கரை அளவே முக்கிய தாக்கத்தைக் கொண்டிருக்கும்.
டயாபடீஸ் அளவீடுகளில் HbA1C பரிசோதனையின் பங்கு என்ன?
குளுக்கோஸோடு எவ்வுளவு சதவிகித சிவப்பு ரத்த அணுக்கள் ஒட்டியிருக்கிறது என அளவிடும் போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு நார்மலாக உள்ளதா அல்லது ப்ரீ டயாபடீஸ்/டயாபடீஸை சுட்டிக்காட்டுகிறதா என இப்பரிசோதனையில் தெரிந்துவிடும்.
டைப் 1 அல்லது டைப் 2 டயாபடீஸ் உடையவர்களுக்கு, எடுத்துக்கொண்டிருக்கிற சிகிச்சை பலனளிக்கிறதா அல்லது சிகிச்சையில் ஏதாவது மாற்றம் தேவைப்படுகிறதா என்பதை இப்பரிசோதனை மூலம் கண்காணிக்கலாம்.
HbA1C பரிசோதனையில் நார்மல் ஹீமோகுளோபின் அளவு என்ன?
5.7% -க்கும் குறைவாக இருப்பதே நார்மல் அளவு. ப்ரீ டயாபடீஸுக்கான அளவு 5.7% – 6.4%. A1C சோதனையில் 6.5%-க்கும் அதிகமாக இருந்தால் டயாபடீஸ்.
HbA1C அளவு அதிகமாக இருந்தால் என்ன செய்வது?
உங்களுக்கு ப்ரீ டயாபடீஸ் இருப்பதாக முடிவுகள் தெரிவித்தால், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்து (உணவு முறையை மாற்றுவது, உடல் இயக்கத்தை அதிகப்படுத்துவது) உடல்நலத்தை மேம்படுத்தலாமா என உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசியுங்கள்.
உங்களது சர்க்கரை அளவு ப்ரீ டயாபடீஸின் அளவுக்குள் இருந்தாலும், A1C அதிகமாக இருந்தால் உங்களுக்கு டைப் 2 டயாபடீஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே இதன் அளவை குறைப்பது உங்கள் உடல்நலத்திற்கு நல்லது.
பரிசோதனையில் உங்கள் A1C அளவு 6.5%-க்கும் அதிகமாக இருந்தால், உங்களுக்கு சர்க்கரை வியாதி உள்ளது என்பதை உறுதி செய்ய கூடுதலாக சில பரிசோதனைகளை மருத்துவர் செய்வார்.
எனினும், உங்களது சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலோ அல்லது சர்க்கரை வியாதி இருப்பதற்கான அறிகுறிகள் தெளிவாக தெரிந்தால் உங்களுக்கு இரண்டாவது பரிசோதனை தேவைப்படாது என அமெரிக்க டயாபடீஸ் அசோசியேஷன் கூறியிருக்கிறது.
(அதிகப்படியான நா வறட்சி, பசியின்மை, கண் பார்வை மங்குவது, குறிப்பாக இரவு நேரத்தில் அதிகமாக சிறுநீர் கழித்தல் போன்றவை அறிகுறிகளாகும் )
இந்தப் பரிசோதனை அடிக்கடி செய்ய வேண்டுமா?
உங்களுக்கு 45 வயது ஆகிவிட்டதா? அப்படியென்றால் நீங்கள் அடிப்படையான A1C டெஸ்ட் எடுக்க வேண்டும்.
45 வயதிற்கும் குறைவாக இருந்து, அதிக உடல் எடையோடு, சர்க்கரை வியாதி வருவதற்கான காரணிகள் எதையாவது கொண்டிருப்பவரும் இந்த பரிசோதனை செய்தால் நல்லது. (குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை வியாதி இருப்பது, அதிகம் இயங்காத வாழ்க்கை முறை, குறிப்பிட்ட இனம் சார்ந்த பின்னனி உடையவர்கள் )
– உங்களுடைய பரிசோதனையின் முடிவு நார்மலாக இருந்து நீங்கள் 45 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருந்து, ஆபத்து காரணிகள் இருந்தாலோ அல்லது கர்ப்பகால டயாபடீஸ் இருந்தாலோ, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இந்த டெஸ்டை எடுத்துப் பாருங்கள்.
– உங்களுடைய பரிசோதனையின் முடிவு ப்ரீ டயாபடீஸாக இருந்தால், இந்த டெஸ்டை ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எடுக்க வேண்டும் என உங்கள் மருத்துவர் கூறுவார்.
– உங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால், வருடத்திற்கு இருமுறை இந்த டெஸ்டை எடுங்கள். உங்களது மருந்துகள் மாறியிருந்தாலோ அல்லது உங்களுக்கு வேறு ஏதாவது உடல்நல பாதிப்புகள் இருந்தாலோ இந்த பரிசோதனையை அடிக்கடி எடுக்க வேண்டும்.
HbA1C அளவை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது.?
10 முதல் 15 கிலோ வரை உடல் எடையை குறையுங்கள். அளவான உடற்பயிற்சிகள் கூட உங்கள் சர்க்கரை அளவை குறைத்து இன்சுலினை உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளும். இதைத் தொடர்ந்து கடைபிடித்தால் உங்களுடைய AIC அளவுவும் குறையக் கூடும்.
பழங்கள், காய்கறிகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகளையோ, அதிகப்படியான நிறை கொழுப்பு, சோடியம், சர்க்கரை கலந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
பாக்கெட் உணவுகளில் எவையெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளன என்று அதன் லேபிளில் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் சுக்ரோஸ், தேன், சிரப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஃப்ருக்டோஸ் என வேறு பெயர்களின் சர்க்கரையை குறிப்பிட்டுப்பார்கள். கவனமாக பார்த்து வாங்குங்கள்.
உங்கள் வயிறு நிறையக் கூடிய அதே சமயத்தில் சர்க்கரை அளவும் உடனடியாக அதிகரிக்காத கார்போஹைட்ரேட்களை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சிகப்பு அரிசி, முழு தானிய பாஸ்தா. உணவு குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் அங்கீகாரம் பெற்ற டயட்டீஷியனிடம் மட்டும் உங்கள் கேள்விகளை கேளுங்கள்.