ஊடகவியலாளர்கள் சமூகப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் – யாழ்.அரச அதிபர் கோரிக்கை…!!!

சமூகத்தை எப்போதும் ஒரு கொந்தளிப்பான நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு மிகவும் கீழ்த்தரமான நிலையில் தற்போதுள்ள ஊகவியலாளர்கள் செயற்படுகின்றார்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற, வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதுள்ள நெருக்கடி நிலையில் நாட்டினை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்லலாம் அல்லது எமது பிரதேசத்தில் உள்ள சவாலான விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து எவ்வாறு அறிக்கையிடலாம் என்று சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய ஊடகவியலாளர்கள், தேவையற்ற விடயங்களை பரபரப்பு மிக்க செய்திகளாக மாற்றுவதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

இது மாற்றப்படவேண்டிய விடயம். ஊடகவியலாளர்கள் தான் சமூகத்தில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் அந்தப் பொறுப்பை நீங்கள் சரியாகச் செய்ய வேண்டும். உங்களுடைய எழுத்துகளுக்கும் பேனா முனைக்கும் சமூகத்தில்  மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி உள்ளது. எனவே இன்றைய  பயிற்சிப் பட்டறையின் மூலம்  மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

யாழ்ப்பாண மாவட்டம் டெங்கில் முன்னணியில் உள்ளது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக 

டெங்குப்பெருக்கம் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்த்தோம். டெங்கு விழிப்புணர்வு தொடர்பில்  ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. எனவே ஊடகவியலாளர்கள் சமூக மற்றும் மக்கள் நலன்சார் விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதில் ஊடகவியலாளர்களுக்கும் அதிக பங்கு உண்டு என்பதை உணர்ந்து அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் – என்றார்.