யாழில் வழிப்பறி கொள்ளை அமோகம்! – பொலிஸார் அசமந்தமா?

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் – சங்கானை இடையே வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வீதிகளில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நேற்றுமுன்தினம் முச்சக்கரவண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கி விட்டு சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.

அண்மைய நாள்களில் பெண் ஒருவர் உட்படப் பலரிடம் அந்தப் பகுதியில் வழிப்பறிக் கொள்ளை நடந்துள்ளது என்று பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும், பொலிஸாரின் நடவடிக்கை திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களால் வீதிகளில் நடமாடவே அச்சப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மக்கள், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.