யாழ் இசைநிகழ்ச்சி குறித்து-புலம்பெயர் தமிழர் கனடா இந்திரகுமார் விளக்கம்..!

ஹரிகரன் இசை நிகழ்வில் சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, நுழைவு சீட்டு மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன் என நொதேர்ன் யூனியின் தலைவர் பத்மநாதன் இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பில், விளக்கமளிக்கும் விதமாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறித்த அறிக்கையில்,
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலட்சக்கணக்கான இரசிகப் பெருமக்களைத் தாண்டி வெகுவிமரிசையாக நொர்தேன் யூனி இன் ஒருங்கமைப்பில் அரங்கேறிய ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்டம் இந்திரகுமார் பத்மநாதன் ஆகிய நான் எனது பெரும்பாலான காலப்பகுதியை கனடாவிலே கழித்தது அனைவரும் அறிவீர்கள்.
எனினும் எனது தாய் மண்ணிற்கும் என் அருமை மக்களுக்கும் எவ்விதத்திலாவது நன்மை புரிய வேண்டும் என்பது எனது நெடுங்காலக் கனவு.
நிதி உதவியோ, பொருள் உதவியோ என்பது சிறிது காலத்திற்கே பயனளிக்கக்கூடியது. என்றுமே அழியாத செல்வம் கல்விச் செல்வம் என்பதை நான் நன்கு அறிவேன். ஏனெனில் அதுவே என் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது.
எமது மக்களுக்கு குறிப்பாக எம் இளைய தலைமுறையினருக்கு சிறந்த உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நோக்கிலே அமைக்கப்பட்டது நொதேர்ன் யூனி ஆகும்.
எவ்வித சுயலாபத்திற்காகவும் அமைக்கப்பட்டது அல்ல. மற்றும் பட்டப்படிப்பின் பின்னரான தொழில்வாய்ப்புகளுக்காகவும் எம் சமூக இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காகவும் அமைக்கப்பட்டதே எமது  நிறுவனம் ஆகும்.
அத்துடன் நின்றுவிடாது பொழுதுபோக்கிலும் அவர்களை மகிழ்விக்க எண்ணி ஏற்பாடு செய்யப்பட்டதே ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்டம் .
முன்னதாக முழுவதுமே இலவச நுழைவு என அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஆசன பகுதியில் தமக்கும் இடம் வேண்டும் என வெளிநாடு முதல் உள்நாடு வரை பலரும் எம்மை தொடர்பு கொண்டதுடன் பணம் செலுத்தி டிக்கட்டினைப் பெறுவதற்கும் தயாராக இருந்தனர்.
 இதனை நோக்குகையில் இலவச டிக்கட்டுக்களைப் பெற்று பலர் நின்று பார்க்கும் போது சிலர் மட்டும் இலவச டிக்கட்டுக்களைப் பெற்று ஆசனங்களைப் பெறுவதைத் தவிர்க்கும் முகமாக ஆசனங்களை பகுதி பகுதியாக பிரித்து குறிப்பிட்ட தொகைகளுக்கு கேட்பவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருத்தாலும் டிக்கட் நுகர்வினை கட்டுப்படுத்தும் நோக்குடனே விலைகள் நிர்ணயிக்கப்பட்டது.
 எனினும் 90 வீதமான ஆசனங்கள் இலவசமாக எமது கல்வி சார் உத்தியோகத்தர்கள், எமது மாணவர்கள் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் எமக்கு உறுதுணையாக இருக்கும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இவ் டிக்கட்டுக்கள் விற்பனை மூலம் கிடைக்கப்பெறும் நிதியை யாழ் கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு (YES) வழங்குவதற்கு தீர்மானித்தோம்.
இவ் நிதியத்தின் ஊடாக வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது உயர் கல்வியை தடையின்றி பெற்றுக்கொள்ள உறுதுணையாக இருக்கும்.
என் அன்பு மக்களுக்கு நான் எப்பொழுதும் நன்றி கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன் . ஏனெனில் பலதரப்பட்ட போலி பரப்புரைகள் மற்றும் விமர்சனங்கள் வந்த போதிலும் அலைகடலென ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இரசிகர்கள், எனது மக்கள் எமக்கும் கலைஞர்களுக்கும் பெரு ஆதரவு அளித்தீர்கள்.
நல்லதொன்று இருப்பின் என்றும் கெட்டதொன்று இருப்பது வழமையே. ஆரம்பத்திலே விமானநிலையத்தில் நான் அளித்த பேட்டியொன்றில் கலைஞர்களுக்கு யாழ்ப்பாணத்திற்கு வருவதில் உடன்பாடு இல்லை. நாங்கள் தான் அவர்களை அழைத்து வருகின்றோம் என கூறியது பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்ததும் நான் அறிவேன்.
அக்கூற்று யாரையேனும் புண்படுத்தும் நோக்கில் கூறப்பட்டது அல்ல. அதற்கான உண்மையான காரணங்கள் பல இருந்தன. ஆனால் இந்திய கலைஞர்கள் யாழ் வருவது விருப்பமல்ல என்பது அதன் பொருளல்ல.
இவ்வாறாக நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே சில வேண்டத்தகாதவர்களால் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பல தடைகள் மற்றும் போலி விமர்சனங்கள் ஏற்படுத்தப்பட்டன.
எனினும் அவை எதையும் பொருட்படுத்தாமல் நிகழ்வானது நாம் எதிர்பார்த்தவாறு மாலை 6 மணிக்கு எமது உள்நாட்டு கலைஞர்களின் வரவேற்பு நடனத்துடன் இனிதே ஆரம்பமானது.
6:25 மணிக்கு, தமிழா தமிழா நாளை நம் நாடே எனும் பாடலைப் பாடி ஹரிஹரன் மக்களின் மகிழ்ச்சியை உச்சத்திற்கு எடுத்துச் சென்றார். 9:10 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் குழப்பங்கள் மற்றும் தடங்கல்களை வேண்டுமென ஏற்படுத்தி நிகழ்வினை இடைநிறுத்தும் நோக்கில் உள்நுழைந்த விசமிகளால் சுமார் 15 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது.
 எனினும் காவல்துறையினர மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நிலைமையானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மீண்டும் ஆரம்பித்து நாம் திட்டமிட்டவாறு அனைத்து நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு 12 மணியளவில் நிகழ்வானது நிறைவுபெற்றது.
இதன்படி 4 மணித்தியாலங்கள் திட்டமிடப்பட்ட நிகழ்வு இறுதியில் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 நிகழ்விற்கு 46,055 மக்கள் பதிவுசெய்திருந்த போதிலும், பல எதிர்ப்புக்கள் மற்றும் சதித்திட்டங்கள் இருந்தபோதிலும் மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு என்பதற்கிணங்க நிகழ்வின் அன்று இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்திருந்ததே எமக்கும் வருகை தந்த கலைஞர்களுக்கும் பெரு மகிழ்ச்சியாகும்.
நொதேர்ன் யூனி ஆனது இவ்வாறானதொரு நிகழ்வினை திட்டமிட்ட வேளையில் அந்நிகழ்வினை நடாத்துவதற்கான தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் எம்மிடம் இல்லாத காரணத்தினால் இதனை முறையாக அரங்கேற்றுவதற்கு 3ம் நபர் நிகழ்ச்சி முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை அணுகி அனைத்து பொறுப்புக்களையும் கொடுத்திருந்தோம்.
இதில் மேடை, ஒலி, ஒளி ஒழுங்கமைப்பு மற்றும் பாதுகாப்பும் உள்ளடங்கலாகும். சில விசமிகளால் இந்நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதற்கு மிகவும் மனம் வருந்துகின்றோம்.
எனினும் பெருமளவு பாதிப்பு ஏற்படாது அனைவரையும் பாதுகாத்து இந்நிகழ்வு நிறைவடைந்ததற்கு எமது மக்களுக்கும் இறைவனுக்கும் நானும் எனது குடும்பத்தினரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன். தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை – 0777315262 தொடர்பு கொள்ளுங்கள்.
இவ்வாறான முதலீடுகள் மற்றும் நம் மண்ணின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளை ஊக்குவிக்காது அதனை தடுக்கும் முகமாக எமது மக்களுக்கோ மண்ணுக்கோ ஒரு செயலேனும் செய்யாத பகுத்தறிவற்ற சிலர் – விசமிகளை ஏவி விடுதல், அவதூறாக விமர்சித்தல் மற்றும் போலிப் பரப்புரைகளை பரப்புதல் பெரும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகின்றது.
எனினும் எம்மவர்களில் பலர் எமது மண்ணின் முன்னேற்றத்திற்காக பல செயற்பாடுகளை செய்த வண்ணம் உள்ளனர்.
அவர்களுடன் இணைந்து எவ்வாறான தடைகள் ஏற்படினும் நானும் எனது நிறுவனமும் எப்பொழுதும் எனது மக்களின் நலனுக்காகவும் மண்ணின் முன்னேற்றத்திற்காகவும் பணிபுரிவோம் என உறுதியளிக்கின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.